இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி அடைத்து வைத்த 3 பேர் கைது!

புதுச்சேரியில் வீட்டில் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண்ணை தங்க இடம் கொடுப்பதாக கூறி இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று வாலிபர்களை  அதிரடியாக கைது செய்த போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.

கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி  வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் தனது சகோதரியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே புறப்பட்ட அவர் தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக அவர் ஆட்டோ ஒன்றில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

ஆனால் ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் அந்த பெண் குழம்பியுள்ளார். அந்த பெண்ணின் மனநிலையை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் அவரை அங்கிருந்து முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அந்த இடத்தில் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

தனியாக நின்றிருந்த அந்த பெண்ணை அங்கிருந்த 3 பேர் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு 3 பேரும் பாலியல் தொல்லைகொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.

மூன்று பேரும் வெளியே சென்றபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அந்த பெண்ணை மீட்டு தொடர்ந்து நடத்திய விசாரணையில் இளம் பெண்ணை கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இளம்பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரை  முதலியார் பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இளம்பெண்ணை இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க :சந்திரயான் மினியேச்சர் மாதிரியை மாணவர்களுக்கு விளக்கினார் நிர்மலா சீதாராமன்!