சட்ட விரோதமாக தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள்: போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்தது யார்?

மதுரையில் சட்ட விரோதமாக தத்துக் கொடுக்கப்பட்ட 3 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோதமாக தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள்: போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்தது யார்?

மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்த சித்ரா. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சாலையோரம் வசித்து வந்துள்ளார். இவருடைய முதல் கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது கணவர் முருகனுடன்  6 குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை இறந்த நிலையில்,  இரண்டு மற்றும் மூன்றாவதாக பிறந்த குழந்தைகள் காணாமல் போயுள்ளன. நான்காவதாக பிறந்த இரட்டை குழந்தையை சித்ராவின் உறவினர் சுகன்யா - கணேஷ்குமார் தம்பதி வளர்த்து வருகின்றனர். ஐந்தாவதாக பிறந்த குழந்தையை செல்லூர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கு சுகன்யா தத்து கொடுத்துள்ளார்.

மேலும் ஆறாவதாக பிறந்த பெண் குழந்தையை பிறந்த மூன்றே நாட்களில் பாலசந்தர் - கலாநிதி தம்பதிக்கு தத்து கொடுத்துள்ளனர். இந்த குழந்தைக்கு சரவணன் என்ற இடைத்தரகர் 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் அனைத்தும் வெளிவந்த நிலையில் குழந்தைகள் நல அதிகாரிகள் 3 குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் குழந்தைகளின் தாயார், தத்து கொடுத்தவர் மற்றும் குழந்தைகளை வளர்த்து வந்த அனைவரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.