வெள்ளரிக்காய் வியாபாரியிடம் 30 லட்சம் கொள்ளை... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்...

மரக்காணம் அருகே வெள்ளரிக்காய் வியாபாரியிடம் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளரிக்காய் வியாபாரியிடம் 30 லட்சம் கொள்ளை... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்...

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் ராஜா, 32 வெள்ளரிக்காய் வியாபாரி, இவர் கடந்த மாதம் 15ம் தேதி மரக்காணம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிட பணம் பட்டுவாடா செய்ய ஸ்கார்பியோ காரில் 30 லட்சம் ரூபாயுடன் வந்தார். காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே, காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயை கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் ஏ.எஸ்.பி., அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, பன்னீர்செல்வம், மணிமாறன், மனோஜ்குமார் உள்பட 6 பேர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 18.40 லட்சம் ரூபாயை பரிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் திருச்சி – திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள கோவில்பட்டி முறுக்கு கடை எதிரே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது பதிவெண் இல்லாமல் வந்த காரை நிறுத்தினர். அப்போது காரில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் மேல் ஏரி குதித்து தப்பி ஓட முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த கோவில்ராஜ் மகன் சுஜித், 28, செங்கல்ப்பட்டை சேர்ந்த குமார் மகன் அசோக், 26, வாசு மகன் அரவிந், 27 என்பதும் இவர்கள் காரில் 6 லட்சம் ரூபாய் வைத்திருந்த பணம் வெள்ளரிக்காய் வியாபாரி ராஜாவிடம் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் மூவரையும் கைது செய்து, கார் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கே.டி.எம்., பைக் மூன்று மற்றும் இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர்.