நாட்டு வெடிகுண்டு வெடித்து கூலி தொழிலாளி படுகாயம்: வெடிகுண்டு தயாரித்த 9 இளைஞர்கள் கைது..!

நாட்டு வெடிகுண்டு வெடித்து கூலி தொழிலாளி படுகாயம்:  வெடிகுண்டு தயாரித்த 9 இளைஞர்கள் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, நாட்டு வெடிகுண்டு வெடித்து இளைஞர் படுகாயமடைந்த சம்பவத்தில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேட்டுத்தண்டலம் கிராமத்தில் முள்புதரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 9 வாலிபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமத்தை சேர்ந்த கனகா என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோன் தனியார் அட்டை தொழிற்சாலைக்கு வாடகைவிட்டப்பட்டுள்ளது.

அட்டை தொழிற்ச்சாலை பின்புறம் மரம், முள்புதர் மண்டியுள்ளது. இதனை தூய்மைபடுத்துவதற்காக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இருளர் பகுதியிலிருந்து சீனு உட்பட நான்கு பேர் நேற்று முன்தினம் வேலைக்கு வந்தனர்.  சீனு, தினேஷ் ஆகிய இருவர் தொழிற்ச்சாலை பின்புறம் உள்ள மரம், முள்புதர்களை கத்தியால் வெட்டி அகற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த நூலால் சுற்றப்பட்ட உருண்டையான வெடிபொருள் மீது மரக்கிளைகள் விழுந்தபோது வெடித்தது. இதில் சீனுவின் முகம், தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சீனு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

உடனே இந்த சம்பவம் தொடர்பாக  திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து வெடிபொருள் அங்கு எப்படி வந்தது, யார் மறைத்து வைத்துள்ளனர் என பல கோணத்தில் விசாரித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 15 -ற்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தண்டலம் பக்கிங்காம் கால்வாய் அருகே கடந்த ஏப்ரல் மாதம் வடசென்னை சேர்ந்தவர்கள் காத்தாடி விடும் போட்டி நடத்தியுள்ளனர், அப்பொழுது அதைபார்க்க தண்டலம் வாலிபர்கள் சென்றுள்ளனர். இதை அறிந்த போலீசார் அங்கிருந்து அனைவரையும் விரட்டியுள்ளனர்.

அப்போது வடசென்னை சேர்ந்தவர்கள் ஒரு மூட்டை அங்கு மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். 
இதை அறிந்த வாலிபர்கள் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு இருப்பது தெரிந்துள்ளது.

 அதை கொண்டு வந்து சம்பவம் நடந்த முள்வேலி பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். ஏற்கனவே கஞ்சா தொடர்பான கோஷ்டி மோதல் உள்ளதாகவும் அதில் பயன்படுத்தலாம் எனவும் வைத்திருந்ததாகவும் தெரியவந்தது.

இதையடுத்து இதில் தொடர்புடைய தண்டலம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த சத்யா.(25), விக்னேஷ் (20), அப்துல் அஜீஸ் (22), நரேஷ் குமார் (23), விக்னேஷ் (23), கன்னியப்பன் (26), தட்சிணாமூர்த்தி (29), திருப்போரூர் சேர்ந்த பிரசாத் (24), திண்டிவனத்தை சேர்ந்த காமராஜ் (22)  ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும்  படிக்க   | ரீல்ஸில் மோகம்... 8 மாத குழந்தையை விற்று ஆப்பிள் ஐபோன் வாங்கிய பெற்றோர்!!