கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் ஒரு ஜெய்பீம்... குலைநடுங்க வைக்கும் போலீஸ் கஸ்டடி சித்ரவதைகள்...

ஜெய்பீம் திரைப்படம் போன்று கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பேசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் ஒரு ஜெய்பீம்... குலைநடுங்க வைக்கும் போலீஸ் கஸ்டடி சித்ரவதைகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராபாளையத்தில் குறவர் சமூகத்தினர் வாழும் குடியிருப்புக்குள் நுழைந்த போலீசார், முதலில் 2 பேரை கைது செய்தனர். பின்னர் ஒருவர், அடுத்ததாக மேலும் இருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். இந்த 5 பேரும் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் போலீஸ் கஸ்டடியில் சில நாட்களாக இருந்த இவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனு அளித்ததை தொடர்ந்து, 5 பேரில் 2 பேரை குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும், கொள்ளை வழக்குகளில் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், போலீசார் கூறியுள்ளனர்.

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி நகைகளை பறித்து சென்றதாகவும், இது தொடர்பாக பிரகாஷ், தர்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 சவரன் நகை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மற்றொருவரான சக்திவேலை இதுவரை நீதிமன்றத்திலோ, உறவினர்களிடமோ காவல்துறை ஒப்படைக்கவில்லை என்பதால், அவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் என, தமிழக முதலமைச்சருக்கு குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, போலீசாரால் விடுவிக்கப்பட்ட செல்வம், தமக்கு நேர்ந்த சித்ரவதைகளை விவரித்துள்ளார். அவர் விவரிக்க-விவரிக்க ஜெய்பீம் மற்றும் விசாரணை படத்தில் வரும் உண்மை காட்சிகளை மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது.