அசோக் நகர் 500 கோடி பணமோசடி... சரணடைந்த நிறுவனர்....

அசோக் நகர் 500 கோடி பணமோசடி... சரணடைந்த நிறுவனர்....

பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து 1லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15% வட்டி தருவதாக கூறி மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஜாவு நிறுவனம் சுமார் 500கோடிக்கும் மேலான மோசடியில் ஈடுபட்டது.  இந்த மோசடி தொடர்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி நூற்றுக்கணக்கனோர் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். 

புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட நபர்களை ஹிஜாவு நிதி நிறுவன உரிமையாளர்களான சௌந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 நிர்வாகிகள் ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

இதனையடுத்து இந்நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக பணியாற்றி 500கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குரு,மணிகண்டன், முகமது ஷெரிப் ஆகிய மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி ஏஜெண்டுகள் திருவேற்காட்டை சேர்ந்த சாந்தி பாலமுருகன், அண்ணா நகரை சேர்ந்த சுஜாதா பாலாஜி, விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்யாணி ஆகிய மேலும் மூன்று பெண்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் 2835 நபர்களிடமிருந்து 235கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.  மேலும் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்த பணத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. 

இந்த வழக்கில் இதுவரை 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் உட்பட 15 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  மேலும் வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முக்கிய நபரான சௌந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் ஹிஜாவு நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  சரணடைந்த சௌந்தர்ராஜனை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்..

அடுத்தபடியாக சௌந்தர்ராஜனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர்.  மேலும் பொதுமக்களிடம் எவ்வளவு பணத்தை ஏமாற்றியுள்ளார் மற்றும் மோசடி செய்த பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளார் என  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:    ஈரோடு இடைத்தேர்தல்.... விசாரணைக்கு வந்த வழக்கு!!!