துப்பாக்கியைத் தயாரித்த ஆசாமிகள்! தேசிய புலணாய்வு துறை கைது செய்து விசாரணை!!!

ஓமலூர் அருகே துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான இரண்டு பேரிடம்(NIA) தேசிய புலனாய்வு போலீசார் 7 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

துப்பாக்கியைத் தயாரித்த ஆசாமிகள்! தேசிய புலணாய்வு துறை கைது செய்து விசாரணை!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கடந்த மே மாதம் 20-ம் தேதியன்று, ஓமலூர் போலீசார் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை பிடித்து, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

மூன்று பேர் கைது:

அதில், அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததும், செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கி தயாரித்ததில் தொடர்புடையதாக, அவர்களின் நண்பரான அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்து, அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியர் அலட்சியம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அறிக்கை:

கியூ (Q) பிரிவுக்கு மாற்றம்: 

இதனிடையே இந்த வழக்கு கியூ (Q) பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. பின், இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கபிலன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பூந்தமல்லியில் உள்ள தனி நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர்.

தொடர் விசாரணை:

இருவரையும் ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து இரண்டு பேரிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்திற்கு ரகசியமாக அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள், இருவரையும் ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | சோமாலியா விடுதி முற்றுகை...106 பணயக் கைதிகள்...களத்தில் இறங்கிய அரச படைகள்!

எந்த தொடர்பும் இல்லை!

ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து செட்டிச்சாவடியில், துப்பாக்கி தயாரித்த வீட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் துப்பாக்கி தயாரித்ததற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் எந்தவித தடை செய்யப்பட்ட அமைப்புடனும், இருவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே சென்ற கபிலனிடமும் போலீசார் விசாரணை நடத்தண முடிவு செய்துள்ளனர். தற்போது ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் சேலத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க | தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த ரகசிய தகவல்...முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கமா?