பாமக செயலாளர் தேவமணி படுகொலை...  மேலும் 3 பேர் அதிரடி கைது...

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி படுகொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாமக செயலாளர் தேவமணி படுகொலை...  மேலும் 3 பேர் அதிரடி கைது...

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி. பாமக-வின் காரைக்கால் மாவட்ட செயலாளரான அவர், கடந்த வாரம்,  6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து, வழக்கு பதிவு செய்த திருநள்ளாறு போலீசார் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகாபட் , காவல் கண்காணிப்பாளர்கள் ரகுநாயகம், வீரவல்லபன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடிவந்தனர். 

படுகொலை செய்யப்பட்ட தேவமணி வீட்டின் எதிரில் உள்ள இடம் தொடர்பாக தேவமணிக்கும், மணிமாறனுக்கும் முன்விரதம் இருந்து வந்ததாகவும், இதில் ஆத்திரமடைந்த மணிமாறன்  தேவமணியை கூலிப்படை மூலம் படுகொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கில் தொடர்புடைய  மணிமாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகிய 4 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சார்லஸ் மற்றும் கூலிப்படையினர் 6 பேரை, போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை அடுத்த மருதாந்ததன்னலூரை சேர்ந்த   சார்லஸ்,  கழுகநிமுட்டத்தை சேர்ந்த பாரதி,  செல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார், ஆகியோரை  நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்திற்கு பயன்படுத்திய பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் நிகரிஹாபட் இவ்வழக்கின் மற்ற எதிரிகளை முழு வீச்சில் தேடும் பணியில் ஈடுப்பட போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.