தடையில்லா சான்றுக்கு 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பிடிஓ கைது!

தடையில்லா சான்றுக்கு 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பிடிஓ கைது!

தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்குவதற்காக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  
ஓசூர் தாலுக்கா, சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் உயிஸ் ரகுமான்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலைக்கு செல்ல இணைப்பு சாலை அமைப்பதற்காக தடையில்லா சான்று கேட்டு தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர் விண்ணப்பம் செய்துள்ளார். சான்று பெற்றுத்தர வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு  30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யா என்பவர் உயிஸ் ரகுமான்னிடம் கூறியுள்ளார்.

மேலும், இதன் காரணமாக சான்று வழங்காமல் அலுவலர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 30 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத உயிஸ் ரகுமான்கான் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி இரசாயன பொடி தடவப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் உயிஸ் ரகுமான்கான் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யாவிடம் கொடுக்க வைத்தனர். பணத்தை பெற்ற புட்டண்ணய்யா வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினத்திடம் 12 ஆயிரம் ரூபாயும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளியிடம் 8 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அவரே வைத்து கொண்டார்.

அதேநேரம் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் வடிவேல், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து லஞ்சம் வாங்கிய மூன்று பேரையும் பிடித்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி இரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நகரத்தினம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யா ஆகிய மூன்று பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:காயமடைந்த பாகுபலி; சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் தீவிரம்!