பெண்ணை காலால் எட்டி மிதித்த பாஜக நிர்வாகி... வீடியோ வைரல்!!

பெண்ணை காலால் எட்டி மிதித்த பாஜக நிர்வாகி... வீடியோ வைரல்!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண் ஒருவரை யூனியன் கவுன்சிலர் காலால் எட்டி மிதித்து தாக்கும் காட்சி வைரலாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாஜக யூனியன் கவுன்சிலரான சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் சரோஜாவை தாக்கியதாக தெரிகிறது.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட நிலையில் சரோஜாவை சாவர்க்கர் எட்டி மிதித்து தாக்கும் காட்சியை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். 

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் சரோஜா அளித்த புகாரின் பேரில் சாவர்க்கர், சசிகுமார், ராஜேஷ், சபிமோள் ஆகிய நால்வர் மீதும், எதிர்த்தரப்பை சேர்ந்த சபி மோள் அளித்த புகாரின் பேரில் சரோஜா அவரது கணவர் தாமரேசன், தாணுமாலயன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சாவர்க்கர் தாக்கியதால் காயம் அடைந்த சரோஜா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சரோஜா கூறுகையில் தன்னை கொடூரமாக தாக்கியதில் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் எனவே தனக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || அமெரிக்க அதிபராக துடிக்கும் இந்தியர்... யார் இந்த விவேக் ராமசாமி!!