சென்னை கே.கே நகர் ரவி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்டு வந்த காவலர் நெல்லை நீதிமன்றத்தில் சரண்

சென்னை கே.கே நகர் ரவி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காவலர் செந்தில் குமார், ஐசக் ஆகிய இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை கே.கே நகர் ரவி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்டு வந்த காவலர் நெல்லை நீதிமன்றத்தில் சரண்

சென்னை கே.கே நகரைச் சேர்ந்த ரவி என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த காவலர் செந்தில் குமார் மற்றும் அவரது காதலி கவிதா ஆகியோர் அடியாட்களுடன் வந்து தாக்கி கடந்த 31ஆம் தேதி இரவு கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

கடத்தி செல்லப்பட்ட ரவியை அந்த கும்பல் செங்கல்பட்டில் வைத்து எரித்து கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக செந்தில் குமாரின் காதலி கவிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து வழக்கில் தொடர்புடைய காவலர் செந்தில் குமார், ஐசக், எட்வின் உள்ளிட்டோரை செங்கல்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் காவலர் செந்தில் குமார் மற்றும் ஐசக் ஆகிய இருவர் நெல்லை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக  செங்கல்பட்டு போலீசார் நெல்லை சென்று சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகே கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் யார் யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.