காவல்நிலையத்திலேயே வழக்கறிஞர்கள் அடிதடி... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காவல்நிலையத்திலேயே வழக்கறிஞர்கள் அடிதடி... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

சென்னை கோட்டூர்புரம் 4 வது சந்து நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன்(63). இவரது வீட்டருகே உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பத்ம நாபன்(40) வசித்து வருகிறார். கோட்டூபுரம் நாயுடு தெரு 4வது சந்து அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுவான பாதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பாதையில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்த போது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன்,தாமஸ் சீனிவாசனுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பெய்த மழையில் சாலையில் மழை நீர் தேங்கியதால் தாமஸ் சீனிவாசன் தனது குடியிருப்பு வாசிகள் மற்றும் சைதாப்பேட்டை வழக்கறிஞர்களான பாலமுருகன், மணிகண்டன்,ஏஞ்சல் ஆகியோருடன் இணைந்து சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இதனை கண்ட வழக்கறிஞர்கள் பத்ம நாபன், ரவி, பாலசந்தர் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். இது குறித்து தகவலறிந்த கோட்டூர் புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதானம் செய்து இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள் வந்த  இரு தரப்பு வழக்கறிஞர்களும் அங்கும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லம்மாள் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.