வீடு புகுந்து திருடும் சகோதரிகள்: திருடிய பொருளை பணமாக மாற்றும் அண்ணன்கள்: 6 மாதங்களுக்கு பின் சிக்கிய கும்பல்...

வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்களை திருடி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4பேரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீடு புகுந்து திருடும் சகோதரிகள்: திருடிய பொருளை பணமாக மாற்றும் அண்ணன்கள்: 6 மாதங்களுக்கு பின் சிக்கிய கும்பல்...

கோவை வெரைட்டி ஹால், செல்வபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக திருட்டு,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் காவல்நிலையத்தில் புகார் அதிகளவில் வந்தன.அதன் அடிப்படையில்  தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கொள்ளை நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்போது 4 பெண்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நுழைந்து, கொஞ்ச நேரத்தில் திரும்பி வெளியே வருவதும், அந்த வீடுகளில் நுழைந்து செல்போன்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு வருவதும் அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

 

ஒரு வீட்டில் 2 பெண்கள் வீடுகளுக்குள் நுழைந்த காட்சிகளை வைத்து, அந்த அடையாளங்களின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 2 பெண்கள் பெயர்கள் வெளிவந்தன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் சௌரியம்மாள் என்பது தெரியவந்தது.இவர்களுக்கு அந்து மற்றும் ரமேஷ் என்ற அண்ணன்கள் உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 சகோதரிகள் திருடி வரும் பொருட்களை, திருட்டுதனமாக விற்று அதனை பணமாக மாற்றுவது தான் இந்த அண்ணன்களின் வேலை என்பதும் விடிகாலை நேரங்களிலேயே இத்தகைய திருட்டுகள் நடந்துள்ளன. கோவிலுக்கு கூழ் ஊற்ற காணிக்கை வசூல் செய்வது போன்று வீடுகளை நோட்டமிட்டு பிறகு சம்பந்தப்பட்ட வீடுகளில், விடிகாலை நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளபோது, இந்த பெண்கள் நுழைந்து திருடுவார்கள் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.