கால்பந்து அணிகளுக்கிடையே மோதல்...வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்...

கோவை மாவட்டம் சூலூரில் கால்பந்து அணிகளுக்கிடையே நடந்த மோதலில் , இரண்டு வாலிபர்களை எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஓட ஓட துரத்தி கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கால்பந்து அணிகளுக்கிடையே மோதல்...வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்...

கோவை மாவட்டம் சூலூர் தெற்கு பகுதியைச்  சேர்ந்தவர் சந்தோஷ். இவரை சுவீட் ராஸ்கல்ஸ் வடக்கு பகுதியைச் சேர்ந்த  ரமேஷ், சம்பத், நாகராஜ்  மற்றும் தினேஷ் ஆகியோர் கடந்த மாதம்  சரமாரியாக தாக்கி் கத்தியால் குத்தியுள்ளனர் .

இது தொடர்பாக சந்தோஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் நீதி மன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் மூன்று பேருக்கு மட்டும் முன் ஜாமீன் கிடைத்த நிலையில் மற்ற ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் தனது நண்பர் தினேசுடன் சூலூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட கும்பல் சந்தோஷ் மற்றும் தினேஷை கல் மற்றும் கட்டையால்  சரமாரியாகத் தாக்கி பாட்டிலை உடைத்து தினேஷைக் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அடி தாங்க முடியாத சந்தோஷ் மற்றும் தினேஷ் தப்பித்தால் போதும் என ஓடி அருகிலிருந்த பிரபல  ஜவுளிக் கடைக்குள் தஞ்சமடைந்தனர். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பேருந்துக்கு நின்றிருந்த  மக்கள் பதற்றத்தில் இருந்த நிலையில் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து  தப்பியோடிவிட்டனர்.

பின்னர் அருகிலிருந்தவர்கள் காயமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகிய  இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சகாக அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து சுவீட் ராஸ்கல்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்த 9 பேரைப் கைது செய்தனர்.