ஆளுநர் மாளிகையில் நடந்த குண்டு வீச்சுக்கு, மாற்றி மாற்றி குற்றம்சாட்டிக்கொள்ளும் பாஜக, திமுக!

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் குறித்து பாஜகவும் திமுகவும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிவரும் பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. முன்பக்க பிரதான நுழைவு வாயிலின் அருகே பெட்ரோல் குண்டை வீசிய பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத், உடனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், கடந்தாண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் இதே கருக்கா வினோத் என்பதும், அந்த வழக்கில் தன்னை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்து போடாததால்தான் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில், கடந்தாண்டு கைது செய்யப்பட்டபோது கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார் என்பதில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. பாஜக தனக்கு தானே குண்டு வீசி நாடகம் ஆடுவதாகக் குறிப்பிட்டு, கருக்கா வினோத்தை, ஜாமினில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார் என்று குறிப்பிட்டு திமுக தொழில்நுட்பப் பிரிவினர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தொழில்நுட்பப் பிரிவினரும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கருக்கா வினோத்தை  முத்தமிழ் செல்வக்குமாரிடம் பணியாற்றி, பின் திமுகவில் இணைந்த இசக்கிப்பாண்டி மற்றும் நிசோக் ஆகியோர்தான் ஜாமினில் எடுத்ததாக பதிவிட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.