சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கள்ளக்குறிச்சி: சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்து வந்த தனிப்பிரிவு- சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . 

இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் என்பவர் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளிடம் இரகசிய தொடர்பில் இருந்து வந்த  காரணத்தினால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணை போனாலோ அவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் இருக்கும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கள்ளச்சாரியம் காய்ச்சியவர்களிடம் தொடர்பில் இருந்ததாக அவரை பணி இடை நீக்கம் செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.