அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு... மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக  தேனி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ரகுநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "ஆண்டிப்பட்டி திருமால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வங்கிகணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. 2017-18ம் நிதியாண்டில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளான ராஜாத்தி, காட்டுராஜா, மாயாண்டி உள்ளிட்டோர் வகி கணக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதில், மாயாண்டி கடந்த 2014ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவரை பயனளியாக காண்பித்து பணம் பெறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று பல முறைகேடுகள் இத்திட்டத்தில் நடைபெற்றுள்ளது. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை முறைகேடுகள் குறித்து விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. எனவே திருமால்புரம் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்