குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டிய குடிமகன்... கார் கண்ணாடியை உடைத்து தடுத்து நிறுத்திய பொதுமக்கள்...

கோவை சிங்காநல்லூர்  அருகே அதிவேகமாக சென்ற கார் வாகனங்கள் மீது மோதி நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார் கண்ணாடியை உடைத்து அதன் ஓட்டுநரை கீழே இழுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டிய குடிமகன்... கார் கண்ணாடியை உடைத்து தடுத்து நிறுத்திய பொதுமக்கள்...

கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி இன்று மாலை சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற வாகனங்கள் மீது மோதி மீண்டும் அதி வேகத்தில் செல்லவே இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனம் மூலம் அந்த காரை விரட்டி சென்று சிங்காநல்லூர் அடுத்துள்ள குளத்தேரி பகுதியில் அந்த காரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த நபரை கீழே இறங்குமாறு கூறிய நிலையில் அந்த நபர் அதிக மதுபோதையில் தகாத வார்த்தைகள் பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் அமர்ந்து இருந்த அந்த நபரை வெளியே இழுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த நபரை பிடித்து சென்ற போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் தனது காரில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டி மோசடியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய திருச்சி சாலையில் பொதுமக்கள் ஏராளமாக புரிந்ததால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.