கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 % சொத்து குவித்ததாக எப்ஐஆர் பதிவு…  

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 % சொத்து குவித்ததாக எப்ஐஆர் பதிவு…   

அதிமுக அரசில் 2016- 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வணிகத்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. மேலும்  2011 -2021 ஆம் ஆண்டு காலகட்டம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த  10 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 76 புள்ளி 65 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம்,  அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அதுமட்டுமல்லாது அவரது குடும்பத்தார் பெயரிலும் பெங்களூரு, சென்னை, திருப்பத்தூரில் சொத்து வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிதம் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர், வீரமணி மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்துகின்றனர். அந்த இடங்களில் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணி வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரண்டதால், போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் கட்சியினரும் வீரமணி வீட்டு முன்,  கண்டன கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போளூர் அடுத்த குருவிமலையில் வசிக்கும் கே.சி வீரமணியின் உறவினரான,  திருவண்ணாமலை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் ஓட்டல் ஹில்ஸ், ஏலகிரியில் உள்ள ஓட்டல், காந்தி ரோட்டில் உள்ள வீரமணி வீடு, நாட்றம்பள்ளி சாலையில் உள்ள மற்றொரு வீடு, திருமண மண்டபம், வீரமணியின் தம்பி காமராஜ் வீடு, அண்ணன் அழகிரி வீடு, வீரமணி உறவினரான பிடி மண்டி வீடு, தமலேரிமுத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவரது வீடு, திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் வீடு,   மகளிர் அணி தலைவி சாந்தி வீடு,  மல்லகுண்ட மாவட்ட பொருளாளர் ராஜா வீடு,  நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ் வீடு,  கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு,  ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு ஆகிய 14 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.