கட்டப்படாத கட்டடத்தை அடமானம் வைத்த முன்னாள் வங்கி அதிகாரி!!

சென்னையில் கட்டப்படாத குடியிருப்புக் கட்டிடத்தை அடமானம் வைத்து 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கட்டப்படாத கட்டடத்தை அடமானம் வைத்த முன்னாள் வங்கி அதிகாரி!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியொன்றின் மேலாளர் மகேந்திரன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் கடந்த 2017 ஆம் ஆண்டு கோயம்பேட்டைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் தங்கள் வங்கிக்கு வந்து திருவான்மியூரில் தங்களுக்குச் சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி இல்லாத நிலையில், தரைதளத்தில் குடியிருப்பு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து தங்கள் வங்கியில் அடமானம் வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வங்கியில் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஸ்ரீநிவாஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற முரளிதரனுக்குச் சொந்தமான நிறுவனம் பெயரில் 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இல்லாத கட்டிடம் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட முரளிதரன்-ஜெயந்தி தம்பதியர் மற்றும் அவர்களுக்கு மோசடியில் உறுதுணையாக இருந்த கூட்டாளிகளைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் திருவான்மியூரில் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டிவந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கோயம்பேட்டைச் சேர்ந்த முரளிதரன் கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் வங்கியை ஏமாற்றும் நோக்கில் தனது மனைவியையும், தன்னையும் பங்குதாரர்களாக காண்பித்து தன் பெயரில் போலியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் பெயரில் தனியார் வங்கியில் குடியிருப்பின் தரைத்தளத்தில் ஏற்கனவே கட்டிடம் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து அளித்து அதன் மூலம் வங்கியிலிருந்து 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் போலீசார் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோசடியில் ஈடுபட்ட முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோரை கடந்த கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முரளிதரனை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மயிலாப்பூர் தனியார் வங்கிக் கிளையின் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உதவி பொது மேலாளரான கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோசாரியோ சில்வர்ஸ்டைன் ஷேன் என்பவர் முரளிதரனுக்கு உடந்தையாக செயல்பட்டு கட்டப்படாத குடியிருப்புக் கட்டிடத்தை நேரடியாக ஆய்வு செய்து கடன் வழங்க தகுதியானது என பொய்யான ஆய்வறிக்கை தயார் செய்து வங்கி மூலம் முரளிதரன் கடன் பெற உதவியது தெரியவந்தது. அதனடிப்படையில் முன்னாள் வங்கி அதிகாரியான ரொசாரியோவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.