32 பெண்களிடம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி- கைதான நைஜீரியர்கள் பரபரப்பு வாக்குமூலம்  

தமிழகம் முழுவதும் 32 பெண்களிடம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக மேட்ரிமோனி மோசடியில் கைதான நைஜீரியர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.  

32 பெண்களிடம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி- கைதான நைஜீரியர்கள் பரபரப்பு வாக்குமூலம்   

இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் பதிவு செய்த பெண்களை குறிவைத்து ஒரு கும்பல்  பணமோசடியில் ஈடுபடுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சுமார் 15க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. குறிப்பாக போலியான பெயர் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிவதாக கூறி பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டெல்லி சென்ற தனிப்படை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குடியிருப்பில் பதுங்கி இருந்த நைஜீரியர்களான பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த கும்பலிடம் பல பெண்கள் மோசடியில் சிக்கி இருப்பதால் நைஜீரியர்களை விசாரணை நடத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முந்தினம்  3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசாரணையில் மோசடி செய்வதற்காகவே ஸ்டூடண்ட் விசா, சுற்றுலா விசா மூலமாக போலி ஆவணங்களுடன்  இந்தியாவிற்குள் நுழைந்து டெல்லி உத்தம் நகரில் தங்கி மோசடி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 5 வருடங்களாக 7 பேர் கொண்ட  நைஜீரிய கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள்  சாலையோரங்களில் வசிக்கும் ஏழை பொதுமக்களிடம் பணத்தை கொடுத்து அடையாள அட்டை பெற்று கொண்டு அதன் மூலமாக வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் முதல் திருமணத்திற்காக மெட்ரிமோனியலில் பதிவிடுபவர்கள் தங்களது பெற்றோர்களின் எண்களை பதிவிடுவதாகவும், இரண்டாம் திருமணத்திற்காக வரன் பார்க்கும் பெண்கள் மட்டுமே சொந்த செல்போன் எண்ணை பதிவிடுகின்றனர். இதனால் தான் விவகாரத்தான பெண்களை மட்டுமே குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.  மேலும் இந்த மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த கும்பலின் தலைவனாக மூளையாக இருந்து செயல்படுவது யார், பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என பல கோணங்களில் விசாரணை நடத்தினர். வேறு மாநிலங்களில் இந்த மேட்ரிமோனியல் மோசடியில் சிக்கிய பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். நைஜீரிய கும்பலில் பெண்கள் உட்பட ஐந்து பேர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் டெல்லியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு டெல்லி போலீசார் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து 2 நைஜீரியர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.