ஆசை வார்த்தைக் கூறி 100 பேருக்கு நாமம் போட்ட மர்மகும்பல்..!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆசை வார்த்தைக் கூறி 100 பேருக்கு  நாமம் போட்ட மர்மகும்பல்..!

சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  இந்த புகாரில் தங்களுடைய குழும பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி காஞ்சிபுரம், சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருப்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலியான நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநில அரசின் ஓட்டுநர் வேலை, அலுவலக உதவியாளர் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு இரண்டு லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுரேந்திரன் மற்றும் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இவர்கள் திருப்பத்தூரில் நேர்முக தேர்வு நடத்தப்போவதாக தகவல் கிடைத்தவுடன் போலீசார் திருப்பத்தூர் விரைந்து சென்றனர்.  

அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூரியா, அருண்குமார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அதன்பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த எட்டு பேரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் இவர்கள் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.  மேலும், இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை கைது செய்யப் பட்ட 8 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.