கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக மோசடி : சென்னையில் தி.மு.க. பிரமுகர் கைது!!

சென்னையில் ஜவுளிக்கடை அதிபரிடம் உதவி செய்வதாகக் கூறி ஆட்களை வரவழைத்து 1 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற தி.மு.க, பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக மோசடி : சென்னையில் தி.மு.க. பிரமுகர் கைது!!

திருப்பூர் மாவட்டம் தத்தன் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். தொழிலதிபரான குமாருக்கு சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சங்கர் குமாரிடம் தங்களிடம் கருப்புப் பணம் இருந்தால் அதை தான் வெள்ளையாக மாற்றி தருவதாகவும், அதற்கு தனக்கு கமிஷன் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய குமார் தன்னிடமுள்ள 5 கோடி ரூபாய் பணத்தை வெள்ளையாக மாற்றித் தருமாறு ஷங்கரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கர் தொழிலதிபரான குமாரிடம் முதற்கட்டமாக 1 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து குமார் நேற்று முன்தினம் தனது காரில் 1 கோடி ரூபாய் பணத்துடன் சென்னை வந்து அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து அறையெடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் சங்கர் தொழிலதிபர் குமாரிடம் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பர் விஜய குமார் மூலம் தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். அதனடிப்படையில் அண்ணா நகர் அரசு மருத்துவமனை அருகே சங்கர் மற்றும் தொழிலதிபர் குமார் ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு சென்று காரில் காத்திருந்தனர்.

அப்போது திடீரென இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் சங்கரின் வழிகாட்டுதல்படி குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த 1 கோடி ரூபாய் பணத்தை வழிப்பறி செய்ய முயன்றதால் குமார் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது குமாரின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக காரைச் சுற்றி வளைத்ததால் வழிப்பறி கும்பல் அலறியடித்து ஓட்டம் பிடித்தது.

அவர்களுடன் சங்கரும் அங்கிருந்து தப்பியோட முயன்றதைக் கண்ட பொதுமக்கள் அவரை துரத்திப் பிடித்தனர். இதனையடுத்து சங்கரை தர்ம அடி கொடுத்து பொதுமக்களே அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் திரு.வி.க நகர் பகுதி தி.மு.க பிரமுகர் என்பதும், ஆட்களை வைத்து தொழிலதிபர் குமாரிடம் இருந்த 1 கோடி ரூபாய் பணத்தை பறிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தப்பியோடிய நபர்களை கைது செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் கருப்புப் பணம் தொடர்பிருப்பதால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தொழிலதிபர் குமாரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.