புகார் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!

புகார் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் கோமதி புகார்:

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி கோமத, தனது வீடு கட்டும் பணியை, அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் முருகன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். முருகன் அதிகப் பணத்தை வாங்கிக் கொண்டு வீடு கட்டும் பணியை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கோமதி புகார் அளித்தார்.

புகார் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை:

இந்த புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்று வந்த போது, கோமதிக்கும் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வீடு கட்டும் பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு ஆனந்த தாண்டவம் கேட்டதால், 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார் கோமதி. பின்னர், கோமதியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, கோமதியை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட ஆய்வாளர், அவரை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பெண்ணை ஏமாற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்:

இந்நிலையில், வீட்டு வேலையை முடிக்காமலும், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியும் வந்த காவல் ஆய்வாளர் மீது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையம், தென்மண்டல காவல் துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் கோமதி புகார் அளித்தார். இது குறித்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக உள்ள ஆனந்த தாண்டவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.