நடிகை"ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகை"ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ.  தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, 20 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலை அருகில் ஜெயப்பிரதா என்கிற திரையரங்கை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.  

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்துக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: புழல் சிறை: மாரடைப்பால் உயிரிழந்த கைதி!