மருத்துவத்துறை இணை இயக்குநர் பணம் கேட்டு மிரட்டல்...  ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை...

தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை.

மருத்துவத்துறை இணை இயக்குநர் பணம் கேட்டு மிரட்டல்...  ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செல்வி எலக்ட்ரோ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் சீனிவாசன் வயது 50.  இவர் முறையான பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே செய்து வந்ததாகவும் கொரோனா காலத்தில் அந்தப் பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட  குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் மருத்துவர் லட்சுமணன்  பணம் கேட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாகவும்,   மீண்டும் தொடர்ந்து மாதம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் போலி மருத்துவர் என்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என்று தொடர்ந்து மிரட்டியதால் மன உளைச்சலில் ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹோமியோபதி மருத்துவரின் மனைவி சாந்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த ஹோமியோபதி மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணமான தேனி மாவட்ட மருத்துவதுறை இணை இயக்குனர் லட்சுமணனை கைது செய்ய வேண்டும் என்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் ஹோமியோபதி மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.