குலசை தரசா திருவிழாவில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்!

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிணம்  தசரா திருவிழாவில்  இரண்டு வயது  பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியை சேர்ந்த நாடோடி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற இந்த தசரா திருவிழாவினை முன்னிட்டு கோவில் பகுதிகளில் தங்கியிருந்து பாசிமாலை விற்பனை  செய்துவருகிறார். இந்தநிலையில் அதிகாலையில் இவரது 2 வயது  பெண் குழந்தை 
கார்த்திகை வள்ளியை காணவில்லை. இதனையடுத்து குலசேகரன்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் 5-ம் தேதி  குலசேகரப்பட்டினம் கோவிலில் மாலை அணிவிக்க வந்த கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி ஒன்றரை வயது ஆண் குழந்தையை சிலர் கடத்திச்சென்றுள்ளனர். 

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்க்கது. இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இரண்டு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.