ரகசிய தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா...!  அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை தனிப்பிரிவு காவல்துறை..!!

ரகசிய தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா...!  அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை தனிப்பிரிவு காவல்துறை..!!

சாத்தான்குளம் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2100 கிலோ கஞ்சாவை மதுரை தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி மதுரை கீரைத்துறை தனிப்பிரிவு போலீசார் கஞ்சா போதை தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து தனிப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி திரேஷ்புரத்தைச் சேர்ந்த ஆரோன் என்பவருக்கு சாத்தன்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பெருமளவில் கஞ்சா இறக்கி வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன் அடிப்படையில் மதுரை கீரைத்துறை தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பரான சுகுமாரன் ஆகியோரை கைது செய்து தூத்துக்குடி திரேஷ்புரத்தில் உள்ள ஆரோன் என்பவரை பிடிப்பதற்காக சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தூத்துக்குடியில் இருந்து சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் பகுதிக்கு விரைந்த தனிப்பிரிவு போலீசார் அங்குள்ள தனியார் தோட்டத்தில் இருந்த தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், முத்துராஜ், சுடலைணி, ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அங்கிருந்த பிக்கப் லோடு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் சுமார் 50க்கும் மேற்பட்ட சணல் சாக்கு மூட்டைகள் இருந்துள்ளது. அதனை வண்டியில் இருந்து இறக்கி பிரித்துப் பார்த்தபோது உள்ளே மற்றொரு வெள்ளை சாக்கு இருந்துள்ளது.

அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதனுள் பண்டல் பண்டலாக பழுப்பு நிற பொட்டலங்களும்  அதற்குள் செய்திதாள்கள் சுற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களும்  இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை காவல்துறையினர் எடை போட்டு பார்த்ததில் அதன் எடை சுமார் 2090 கிலோ இருந்துள்ளது.

இதுகுறித்து மதுரை தனிப்பிரிவு போலீசார் தூத்துக்குடி மதுவிலக்கு டிஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து, சாத்தான்குளம் தனி பிரிவு போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் தோட்டத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் 2090 கிலோ கஞ்சாவை மூட்டை போட்டு மீண்டும் அதே பிக்கப் லோடு வாகனத்தில் ஏற்றி குற்றவாளிகளையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

தமிழகத்தின் தென்கோடி முனையான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ரகசிய தோட்டத்தில் 2090 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த ரகசிய தோட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை தூத்துக்குடி கஞ்சா வியாபாரி ஆரோன் என்பவருக்கு விற்பனை செய்ததாக தோட்டத்து உரிமையாளர் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இதுவரை தோட்டத்தை விற்பனை செய்ததற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று வருவாய்த் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

எனவே காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு 2000 கிலோ கஞ்சா கிராமப்புற தோட்டத்தில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? என்று முறையான விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...?