செல்போன் மற்றும் ரூ.500 பணத்திற்காக ஒருவர் அடித்துக் கொலை!

வெறும் செல்போன் மற்றும் ரூ 500 பணத்திற்காக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று சாலையோரம் கிடப்பதாக பொன்னேரி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தில் எந்த ஆவணங்களும் இல்லாததால் இறந்த நபர் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தடப்பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 174ல் சந்தேக மரணத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்ட சடலத்தில் தலையில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து பொன்னேரி காவல்துறையினர் சடலம் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது உயிரிழந்த நபர் பொன்னேரியில் இருந்து தச்சூர் நோக்கி நடந்து சென்றது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அவரை பின் தொடர்ந்து ஒருவர் சென்றது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்ததில் பின் தொடர்ந்து நடந்து சென்ற நபர் கிருஷ்ணாபுரம் மேட்டுக்காலனியை சேர்ந்த இதயராஜ் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இதயராஜை பிடித்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவரின் செல்போனை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்துள்ளார். தொடர் விசாரணையில் சாலையில் நடந்து சென்றவரை பின் தொடர்ந்து செல்போன், மற்றும் 500ரூபாய் வழிப்பறி செய்து கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததை இதயராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதயராஜ் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இறந்தவரின் செல்போனை கொண்டு நடத்திய விசாரணையில் இறந்த நபர் பெரியபாளையத்தை சேர்ந்த பாபு (35) என்பதும் இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளதும் தெரிய வந்தது. தூத்துக்குடி செல்வதாக தமது குடும்பத்தினரிடம் கூறி சென்ற பாபு பொன்னேரிக்கு ரயில் மூலம் வந்து இங்கிருந்து பெரியபாளையம் செல்ல இருந்ததும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த நாளில் பேருந்து ஏதும் இல்லாததால் நடந்தே செல்ல திட்டமிட்டு பாபு தச்சூர் நோக்கி சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் கொலை செய்யப்பட்ட பாபுவின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. 

வழிப்பறி செய்து கொலையை அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து சந்தேக மரணம் வழக்கை ஐபிசி 302, 397 கொலை, வழிப்பறியின் போது கொலையை அரங்கேற்றுதல் என இரு பிரிவுகளாக மாற்றிய பொன்னேரி காவல்துறையினர் வழிப்பறி கொள்ளையன் இதயராஜை கைது செய்து திங்களன்று பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.  செல்போன், பணத்திற்காக வழிப்பறி கொள்ளையனால் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க: சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!