போதைக்கு அடிமையான தனது மகனையேக் கொன்ற தந்தை கைது!

அகமதாபாதில், பல பகுதிகளில் மனித உடலுறுப்புகள் கண்டெடுக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

போதைக்கு அடிமையான தனது மகனையேக் கொன்ற தந்தை கைது!

போதைக்கு அடிமையான தனது சொந்த மகனயே கொன்று அவனது உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் தந்தை வீசியிருக்கிறார். பல பகுதிகளில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நடத்திய விசாரணையில் இறந்தவரின் 65 வயது தந்தையைப் போலீசார் கைது செய்தனர்.

கடந்த மூன்று நாட்களாக அகமதாபாத்தின் ஆடம்பர பகுதிகளில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்த பொது மக்கள் பதற்றம் அடைந்து, அகமதாபாத் நகர காவல்துறையின் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அகமதாபாத்தில் உள்ள அம்பாவாடியில் வசிக்கும் 65 வயதான நிலேஷ் ஜோஷி, போக்குவரத்துக் காவலராக பணியாற்றியிருக்கிறார். தனது 21 வயதான மகன் ஸ்வயம், போதைப் பொருள் மற்றும் குடிப் பழக்கத்திற்கு அடிமை ஆனவர் எனக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ப்ரேம்வீர் சிங் இது குறித்து பேசுகையில், “இந்த தந்தையும் மகனும், அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். மகனின் போதைப் பொருள் பழக்கத்தைத் தட்டிக் கேட்டு, அடிக்கடி அடிதடியில் இறங்குவதும் அவர்களுக்கு இடையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், கடந்த ஜூலை 18ம் தேதி நடந்த தகராறில், அம்மிக் கல்லை ஸ்வயமின் தலையில் பல முறை அடித்துக் கொலை செய்திருக்கிறார். அதனை மறைக்க, ஸ்வயமின் உடலை எலெக்ட்ரிக் கட்டரின் உதவியுடன் ஆறு துண்டுகளாக வெட்டி கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் வீசியிருக்கிறார்.” எனக் கூறினார்.

தனது மகனை அடித்துக் கொன்ற பிறகு, கடையில் இருந்து ப்ளாஸ்டிக் பைகள், மற்றும் எலெக்ட்ரானிக் கட்டரை கலுபுர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வீட்டிற்கு வந்திருக்கிறார். பின், தனது மகனின் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி பைகளில் கட்டி, தனது ஸ்கூட்டரில் எடுத்துக் கொண்டு வாஸ்னா மற்றும் எலிஸ் பாலம் சுற்றுப் பகுதிகளில் வீசியிருக்கிறார்.

மனித உடல் பாகங்களைக் கண்ட வாஸ்னா பகுதி மக்கள், அப்பகுதி காவல் நிலையத்தில், ஜூலை 20ம் தேதி புகாரளித்துள்ளனர். இதனை அறிந்த ஜோஷி, நேப்பாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். தகவலை அறிந்த போலீசார், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் வழியாக நேபாள எல்லைக்கு சென்று கொண்டிருந்த ஜோஷியை, ​​சனிக்கிழமை (23 ஜூலை) பிற்பகல் ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் அவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்து கைது செய்யதனர்.

இந்த கொடூர சமபவம், அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.