வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...

வடிவேலு படத்தில் வரும் காமெடியைப் போலவே, ட்ரயல் பார்ப்பதாக சொல்லி, பைக்கைத் திருடிய சம்பவம், நெல்லையில் அரங்கேறியுள்ளது.

வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...

திருநெல்வேலி: அஞ்சுகிராமத்தை அடுத்த விஸ்வநாதபுரத்தில் ஆட்டோ கன்சல்ட்டிங் நடத்தி வருகிறார் ஜேம்ஸ்ராஜன். பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பதும், பைனான்ஸ் செய்வதும் இவரது தொழிலாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இவர் தான் நமது வடிவேலு.

கஸ்டமர் வேடத்தில் மர்ம ஆசாமி:

இந்நிலையில் கடந்த வாரம் டிப்டாப் ஆசாமி ஒருவர் ஜேம்ஸ்ராஜனிடம் தனக்கு ஒரு பல்சர் வண்டி வேண்டும் என கூறியுள்ளார். ஸ்கூட்டியில் வந்த அந்த மர்ம ஆசாமி, வண்டியை வெளியே நிறுத்தி விட்டு, அதிக வாகனங்கள் நிறைந்த பகுதியை அடைந்தார். அதில் தனக்கு பிடித்த ஒரு பல்சர் பைக்கை தொட்டுப் பார்த்தவர், அதில் ட்ரயல் பார்ப்பதற்கு கேட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...

பல்சர் மீது திடீர் மோகம்...

உரிமையாளரும், ஸ்கூட்டியை விட்டு விட்டுத்தான் பல்சரை ஓட்டிச் செல்கிறார் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தார். பல்சரில் ஏறி பல் இளித்துக் கொண்டு போனவர்தான் திரும்பி வரவே இல்லை.

வரும்.. ஆனா வராது...

ஏமாந்து போய் விட்டோமோ, என்று மூளையில் சுளீரென அடிக்கவே, வெளியே நின்றிருந்த ஸ்கூட்டியை வசப்படுத்தினார். வண்டியில் இருந்த ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் முகவரியை வைத்து விசாரித்துப் பார்க்கையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

மேலும் படிக்க | வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!

அப்போ இதுவும் ஃப்ராடா?

அந்த மர்ம ஆசாமி விட்டுச் சென்ற ஸ்கூட்டி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்த வேறு ஒருவரது என்பது தெரியவந்தது.  தான் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த ஜேம்ஸ்ராஜன் பழவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரலாம் பிடிக்க முடியாது சார்...

திருடிய பைக்கில் வந்து, மற்றொரு பைக்கை திருடிச் சென்ற திருடர் குல மாணிக்கம் விரைவில் அகப்படலாம் என்றும், காவல் நிலையத்தில் வழுக்கி விழலாம் எனவும் அனுமானிக்கப்படுகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஆதாரங்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- போலீஸ் குறித்து புகார்...