திசையன்விளை வழக்கு: காவல்துறை வழக்கை திசை திருப்ப முயற்சி...  உறவினர்கள் போராட்டம்!!

திசையன்விளை வழக்கு: காவல்துறை வழக்கை திசை திருப்ப முயற்சி...  உறவினர்கள் போராட்டம்!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் திசை திருப்ப முயல்வதாக உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முத்தையா என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் சுரேஷ் என்ற நபரின் சகோதரியை கேலி செய்ததால் ஏற்பட்டதாக கூறி போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்து, கொலை செய்யப்பட்ட முத்தையாவின் குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொலை சம்பவம், மாற்று சமூக பெண்ணை, முத்தையா காதலித்ததால் தான் நடந்தது, ஆனால் போலீசார் இந்த சம்பவத்தை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர், என கொலை செய்யப்பட்ட முத்தையாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல்துறை விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மாவட்ட உரிமையியல் நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதுடன், நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சார்பில் அறிவித்துள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் முத்தையாவிற்கு நெருங்கிய நண்பர்கள் என்றும், இருவரும் சகோதரர்களைப் போலவே பழகி வந்தார்கள் எனவும், இந்த கொலைச் சம்பசத்திற்கும் கைதான நபர்களுக்கும் தொடர்பில்லை எனவும் தெருவிக்கின்றனர்.

காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று வெளியேவிட்ட நிலையில் மீண்டும் அவர்களை கைது செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நீதி கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதையும் படிக்க || அரசு பேருந்துகள் மீது தாக்குதல்; நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு.. கடலூரில் நடப்பது என்ன?