புதுச்சேரியில் பைக் திருடர்களை சிசிடிவி உதவியுடன் கைது செய்த போலீசார்;

புதுச்சேரியில் மருத்துவ மாணவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பெங்களுரை சேர்ந்த வாலிபர் உட்பட இரண்டு பேரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் பைக் திருடர்களை சிசிடிவி உதவியுடன் கைது செய்த போலீசார்;

கடலூர் செல்லான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (21), இவர் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார், இவர் கடந்த 12 ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற போது தனது இருசக்கர வாகனத்தை கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்தமிடத்தில் நிறுத்தி விட்டு கல்லூரிக்கு சென்று மாலை 8:30 மணியளவில் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மனோஜ் இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை வளாகம் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், டிவிஎஸ் வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மனோஜின் யமாஹா வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அவர்கள் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியான பொரையார் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மீன் சேகரிடம் பணியாற்றும் பெங்குளுரை சேர்ந்த அர்ஜூன் (22), புதுச்சேரி கரையாம்புத்துரை சேர்ந்த பாலமுருகன் (46), என்பதும் தெரியவந்தது.

பின், பொறையூர் பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அர்ஜூன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்ததாகத் தெரியவந்தது. அது மட்டுமின்றி, ‘மீன்’ சேகர் பிடிக்கும் மீன்களை எடுத்து சென்று விற்பனை செய்ய இருசக்கர வாகனம் தேவைப்பட்டதால் பாலமுருகன் உடன் சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனம் திருடியதாக ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து, இவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.