கத்தியை காட்டி மிரட்டி 2.5 கோடியுடன் காரை கடத்திச் சென்ற கும்பல்! 9 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவல்துறை

மதுரை அருகே நகைக்கடை அதிபரை கத்தியை காட்டி இரண்டரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை  ஒன்பது மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கத்தியை காட்டி மிரட்டி 2.5 கோடியுடன் காரை கடத்திச் சென்ற கும்பல்! 9 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவல்துறை

மதுரை  வடக்கு மாசி வீதி பகுதியைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் தர்மராஜ். இவர் வியாபார விஷயமாக இரண்டரை கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு, கடை ஊழியர் கோவிந்தராஜுடன் காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். பிரவீன்குமார் என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார். மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்தை அடுத்த நேசநேரி என்ற இடத்தில் சென்றபோது இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி காருடன் மூவரையும் கடத்தியுள்ளனர். வழியில் தர்மராஜ் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு மூவரையும் காரில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். பின்னர் இரண்டரை கோடி ரூபாயுடன் காரை கடத்திச் சென்றுள்ளனர்.

புகாரின் பேரில் விரைவாக களமிறங்கிய காவல்துறை, கார் ஓட்டுநர் பிரவீன்குமார் ஏற்பாட்டின் பேரிலேயே கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதை கண்டறிந்தது. 

இதனைத் தொடர்ந்து  திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருந்த மதுரை திருநகரைச் சேர்ந்த  அலெக்ஸ் பாண்டியன், விளாச்சேரியைச்ச்சேர்ந்த அருண்குமார் ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கொள்ளை நடந்த 9 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.