ஆற்றில் கை வைத்த மர்ம நபர்களை மாட்டு வண்டியோடு தட்டி தூக்கிய போலீஸ்!

ஆற்றில் கை வைத்த மர்ம நபர்களை மாட்டு வண்டியோடு தட்டி தூக்கிய போலீஸ்!

வைகை ஆற்றில் மணல் கடத்திய மர்ம நபர்களை போலீசார் தட்டி தூக்கியதோடு, திருடுவதற்கு உபயோகித்த மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் நிகழ்ந்துள்ளது.

சமீப காலமாகவே அரசாங்க உத்தரவை மீறி ஆறு, குளங்களில் மணல் திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி  சட்டத்திற்கு புறம்பான மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ள போதும், கண்காணிப்பில் இருக்கும் காவல் துறையினரின் கண்களில் மண்ணை தூவி விட்டு, ஆற்று மணலை கடத்தி தான் வருகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரம் வைகை ஆற்றில் நள்ளிரவு நேரங்களில், மர்மநபர்கள் மாட்டுவண்டி மூலம் மணல் திருடி கொண்டிருப்பதாக எஸ். பி தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்புராஜ், அலெக்ஸ் பாண்டி, ஆதன், சோலைத்தேவன் பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் போலீசார் கையோடு பறிமுதல் செய்தனர்.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.