வங்கியில் கொள்ளை முயற்சி; போலீஸ் விசாரனை!

வங்கியில் கொள்ளை முயற்சி; போலீஸ் விசாரனை!

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கூகலூர், குளத்து கடை, புதுக்கரை, புதூர், கணபதி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கணக்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல வங்கிக்கு வந்த ஊழியர்கள் வங்கிக்குள் சென்று பார்த்த போது வங்கியின் பின்புறம் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய விசிறி உடைக்கப்பட்டு அந்த துளை வழியாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பின்புறம் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை வானத்தை நோக்கி திருப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசார் மற்றும் வங்கி மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர், பவானி டிஎஸ்பி அமிர்த வர்ஷினி, கோபி செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'வீரா' வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் வங்கிக்கு பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களை வங்கி பணியாளர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். 

இதையும் படிக்க:பிரதமரை வரவேற்க அமெரிக்காவில் பிரமாண்ட பேரணி!