பாஜக பிரமுகர் கல்யாணராமணனின் அனைத்து இணையதள கணக்குகளையும் மூடக்கோரி பரிந்துரை

பாஜக பிரமுகர் கல்யாணராமணனின் அனைத்து இணையதள கணக்குகளையும் மூடக்கோரி காவல்துறை நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.

பாஜக பிரமுகர் கல்யாணராமணனின் அனைத்து இணையதள கணக்குகளையும் மூடக்கோரி பரிந்துரை

பாஜக பிரமுகர் கல்யாணராமன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டதால் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முக்கிய தலைவர்களையும் அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால்,சென்னை சிட்லப்பாக்கத்தில் ஒரு வழக்கும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017 , 2018 இல்  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் ஜனவரி 2021 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறு பேசி பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் பிப்ரவரி மாதம் 2021 இல் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ,குண்டர் சட்டமும் ரத்தானது.அதன் பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்யும் போது மத உணர்வுகளை புண்படுத்தும்  வகையில் கருத்து பதிவிட மாட்டேன் என நீதிமன்றத்தில் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.  அதனடிப்படையில் பிணையில் வெளி வந்த பிறகும் அரசியல் தலைவர்களையும்,அவர்கள் குடும்பத்தை பற்றி அவதூறாக கருத்து பதிவிடுதல் மற்றும் பிராமண பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளத்தில் தொடர்ந்து கருத்து பதிவிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். கைது செய்வதற்கு முன்பு வரை தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பல பேர் பற்றிய தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் பாஜக பிரமுகர் மீது கண்டனங்களும் எழுந்தன. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரது வீட்டில் அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள தனிப்படை செல்லும் போது, பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவரது நண்பர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.பாஜகவை சேர்ந்த உங்களை போன்றவர்கள் துகுடித்துவிட்டு அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா என காவல்துறையினர் பேசியதற்கு போலிசாரை அவதூறாக பேசியதாக போலிசார்  தெரிவித்தனர்.

மேலும் 7 வருட தண்டனைக்கு குறைவாக உள்ள சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 41 a கிரிமினல் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்துமாறு கோரி கைதுக்கு ஒத்துழைக்காமல் வீட்டினுள் சென்று கூட்டி கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதுபோன்று 7 வருட தண்டனை குறைவாக  சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும் முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்காத போது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே போலீசார் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சித்தால் பாஜக பிரமுகர் கல்யாணராமனை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து வந்தனர்.

கல்யாணராமணிடம்  போலீசார் விசாரணை நடத்தி சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில்  குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் ஆனந்தன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பாஜக பிரமுகர் கல்யாண ராமனுக்கு வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி முரளிகிருஷ்ணன் ஆனந்தன் உத்தரவின்பேரில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாஜக பிரமுகர் கல்யாணராமன் பயன்படுத்தி வந்த அனைத்து வகையான இணையதள கணக்குகளையும் முடக்கக் கோரி காவல் துறை சார்பில் பரிந்துரை செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.