புதிய நிறுவனம் அமைக்கலாம் எனக்கூறி ரூ.1 கோடி மோசடி: ஒருவர் கைது

கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த ரவுடி ஒருவரை சென்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததுடன் அவனது கூட்டாளிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.  

புதிய நிறுவனம் அமைக்கலாம் எனக்கூறி  ரூ.1 கோடி மோசடி:  ஒருவர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரன். இவருக்கு அறிமுகமான கார்த்திக் பிரசன்னா என்ற நபர் ரயில்வேத்துறைக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தனியார் ஏஜென்சி ஒப்பந்தத்தைப் பெற்று நிறுவனம் அமைத்துத் தருவதாகவும், அதற்கு ஒரு கோடி ரூபாய் வரை பணம் செலவாகும் எனவும் முத்துக் குமாரனிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி கார்த்திக் பிரசன்னாவிடம் முத்துக் குமாரன் 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாள் ஆகியும் நிறுவனம் குறித்து எந்த பேச்சு வார்த்தையிலும் கார்த்திக் பிரசன்னா ஈடுபடாமல் இருந்து வந்ததால் விரக்தியடைந்த முத்துக் குமாரன் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கார்த்திக் பிரசன்னாவிடம் கேட்டுள்ளார். பணத்தை இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் என முத்துக் குமாரனிடம் சாக்கு சொல்லி இழுத்தடித்து வந்த கார்த்திக் பிரசன்னா, ஒரு கட்டத்தில் முத்துக் குமாரனை கூலிப்படையை ஏவி முத்துக் குமாரனை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி அதை வீடியோவாக எடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முத்துக் குமாரன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திக் பிரசன்னா மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர் எனக்கூறி பண மோசடிகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மதுரையைச் சேர்ந்த ரவுடி கணபதி (எ) கணேசன் இச்சம்பவத்தில் கார்த்திக் பிரசன்னாவிற்காக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ரவுடியான கணபதி (எ) கணேசன் இருப்பிடத்தை செல்போன் சிக்னல் மூலம்  விருகம்பாக்கம் தனிப்படை போலீசார் கண்டறிந்து அவனை சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரவுடி கணேசனுடன் தொடர்புள்ள மேலும் சில குற்றவாளிகளைத் தீவிரமாக தனிப்படை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.