மாணவி கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்...

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியாவை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாணவி கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்...

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் கல்லூரி மாணவி சத்தியா அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் பள்ளிப் பருவம் முதலே சதீஷ் சத்தியாவிடம் பழகி வந்த நிலையில், அறியாமையைப் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதும், பின் விவரம் அறியும் வயதில் சத்தியா சதீஷிடம் இருந்து விலகத் தொடங்கியதால் ஆத்திரத்தில் பலமுறை சதீஷ் சத்தியாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் படிக்க | பேயை விரட்டுவதாக கூறி ‘நரபலி’ பூஜை செய்தவர்கள் கைது...

மேலும், கடந்த 4 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ் சத்தியாவை கன்னத்தில் அறைந்ததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின் சதீஷை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

சத்தியாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் பேசி முடித்ததை அறிந்த சதீஷ் நேற்று மதியம் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்தியாவை அங்கு வந்த சதீஷ் ரயில் முன் தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது மக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் போலீசாரின் விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மேலும் படிக்க | ஏன் முகத்தை மூடி அழைத்து வந்தீர்கள்? - நீதிபதி கேள்வி...

இதற்கிடையே மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் சத்தியாவின் தந்தை மாணிக்கம் இன்று அதிகாலை மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இருவரது உடலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. பின்னர் பழவந்தாங்கல் கண்ணன் காலனியில் உள்ள மின் மயானத்தில் இருவரது உடலும் தகனம் செய்யப்பட்டுள்ளாது. 

மேலும் படிக்க | கேரளா: நரபலி விவகாரத்தில் கைதான 3 பேருக்கு 12 நாட்கள் காவல்.. 26 பெண்கள் மாயமானதால் வலுக்கும் சந்தேகம்.. !

விசாரணை முடிந்து கொலையாளி சதீஷை போலீசார் சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் முன்னிலயில் ஆஜர்படுத்திய நிலையில், சதீஷுக்கு வரும் அக்.28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நடுவர் மோகனாம்பாள் உத்தவிட்டார். அதனைத் தொடர்ந்து சதீஷை போலீசார் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

ஏற்கனவே கொல்லப்பட்ட சத்தியா குடும்பத்தார் தரப்பில் சதீஷ் மீது இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளதாகவும், போலீசாரின் அலட்சியமே இந்த இரு உயிரிழப்பிற்கு காரணம் எனவும் சத்தியா குடும்பத்தார் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில்  காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சத்தியா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இளமையாக இருக்க நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...