சத்யா ஸ்டூடியோ வழக்கு... தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!!

சத்யா ஸ்டூடியோ வழக்கு... தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!!

சத்யா ஸ்டூடியோக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மூன்று மாதத்தில்:

சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான, 2004ஆம் ஆண்டு வரை 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தக் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தாததால், நிலத்தை திருப்பி எடுத்து 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பாக நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு செலுத்த வேண்டிய 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். 

எதையும் ஆராயாமல்:

மேலும், சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள அரசு நிலத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்கவும், 2019ஆம் ஆண்டு திட்டப்படி இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடரவும் உத்தரவிட்டார்.  இதனை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பில்   மேல்முறையீடு மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அதில்,  அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு நற் சான்றிதழ் அளிப்பது போல தனி நீதிபதியின் உத்தரவு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.  இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு ஒரு போதும் எதிராக இல்லை எனவும் பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராயாமல் தனி நீதிபதி தீர்ப்பளித்துளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடகை உயர்வு:

மேலும், 2024ம் ஆண்டு வரையிலான வாடகையை செலுத்தி விட்டதாகவும், 23 ஆயிரத்து 939 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 1998 முதல் 2001 வரைக்கும் ஒரு கோடியே 64 லட்சத்து 37 ஆயிரத்து 732 ரூபாயாகவும், 2001 முதல் 2004 வரை ஒரு கோடியே 90 லட்சத்து 97 ஆயிரத்து 491 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாகவும், தன்னிச்சையான இந்த உயர்வை தான் எதிர்ப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு என்ன?:

இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து அரசு பதிலளிக்க, அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  அதுவரை நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டுமென சத்யா ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன்பாபு  கேட்டுக்கொண்டார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:   உரிமையாளர்களை நிர்வாணமாக்கி நகை கொள்ளை...!!