செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தீர்ப்பு ஒத்தி வைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தீர்ப்பு ஒத்தி வைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார். அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார். 

வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆவதாக குறிப்பிட்ட அவர், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்க்றிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட  தகவலின்ப்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏறபடவில்லை எனவும் வாதிடப்பட்டார்.

மேலும், செந்தில் பாலாஜியின் கால் மரத்து போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சனை இருந்து வருவதாக குறிப்பிட்டார். மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக  ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். 

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் காட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இதையும் படிக்க: லியோ: அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கு; நாளை ஒத்திவைப்பு!