மன நல காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் கைது..!

மன நல  காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் அருகே தனியார் காப்பகத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காப்பக உரிமையாளரை காவல்துறையினா் கைது செய்தனா்

திருப்போரூர் அடுத்த பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகம் செயல்பட்டு வந்தது. வீரமணி என்பவர் கடந்த 1999 -ஆம் ஆண்டிலிருந்து இந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என 55 பேர் இருந்துள்ளனர். 

இந்த காப்பகத்தில் வசித்து வந்த பெண் ஒருவரிடம் காப்பக உரிமையாளர் வீரமணி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளார். 

இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்தார். பின்னர் இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணி்பாளர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர். 

அங்கு இருந்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வீரமணியை இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு காப்பக உரிமையாளர் வீரமணியை கைது செய்தனர். 

இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள்  ஆகியோர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். காப்பகம் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய இருப்பதால் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 55 பேர் இந்த அன்பகம் காப்பகத்தில் இருந்ததாகவும், அதில் ஒரு பெண்ணிற்கு உரிமையாளர் வீரமணி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மணநலக் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், மற்றவர்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு உரிமை பெற்ற மூன்று காப்பகத்தில் ஒப்படைக்கபுள்ளதாகவும் கூறினார். 

அதோடு, இந்த காப்பகம் முறையாக உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததாகவும், அரசு மெய்க்கால் மற்றும் புறம்போக்கு இடத்தில் இயங்கி வந்ததும் தெரியவந்ததாகவும்  தெரிவித்தார். மேலும் தொடர் விசாரணையின் பின்புதான் மேற்கொண்டு யாருக்காவது பாலியல் புகார் கொடுத்துள்ளார்களா என்பது தெரியவரும், இங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய பின்பு இந்த அன்பகம் காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பேட்டியளித்தார்.

இதையும் படிக்க   | ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு...தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!