டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

பிரபல யுடியூபரும் இரு சக்கர வாகன சாகசக்காரருமான டிடிஎப் வாசனின் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூ-ட்யூபரும், பைக்கில் அதிவேகமாகச் சென்று வீடியோ வெளியிட்டுவந்தவருமான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சார்ந்த வைகுந்தவாசன் எனப்படும் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தில் சிக்கினார். 

இவரது தொடர் செயல்பாடுகள் சாலைகளில் செல்லும் இதர வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், இவரைப் போன்று பிற இளந்தலைமுறையினரும்  ஆகிவிடக்கூடாது என்பதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும்,  இவருக்கு எதிராக காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகளைக் கருத்தில் கொண்டும் இவரது ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணை (Show-Cause Notice) வழங்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க ஏதுவாக அவருக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும் அவர் தனது தரப்பில் எதுவும் தெரிவிக்காததாலும், அவரது ஓட்டுநர் உரிமம் 06. 10.2023 முதல் 05. 10.2033 வரை பத்து வருடங்களுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோல பிற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையில், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக், கார் ஓட்டுபவர்களின் உரிமஙாகளும் பத்து வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

அதேபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரப்பாலத்தில் ஒரு சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் 9  நபர்கள் உயிரிழக்க நேரிட்டது. பூர்வாங்க விசாரணையில் அந்த விபத்துக்குக் காரணம் ஓட்டுநரின் தவறே எனத் தெரியவருவதால் அவரது உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.