காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட இளைஞர்!! என்ன காரணம்?

கோவை அருகே இளைஞரை தகாத வார்த்தையால் திட்டிய ஆடியோ வெளியானதால் காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் காவல்துறைக்கு எதிராக வெளியிட்ட வாட்ஸ்ஆப் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட இளைஞர்!! என்ன காரணம்?

போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த நவீன் என்ற ஓட்டுனர் பொது இடத்தில் நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மதுக் குடித்தபடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சையது அலி இதனை கண்டித்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.  

உடனே அங்கிருந்து சென்ற நவீன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் நடிகர் தனுஷ் நடித்த மாரி படத்தில் வரும் "இந்த ஏரியா வேணா உன் கண்ட்ரோலில் இருக்கலாம் ஆனால் நான் அவுட் ஆப் கண்ட்ரோல்" என்ற வசனத்தை வைத்துள்ளார். இதனை சிலர் உதவி ஆய்வாளர் சையது அலிக்கு அனுப்பி வைக்க அவர் நவீனை வாட்ஸ்ஆப் காலில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அதனை வேறொரு செல்போனில் பதிவு செய்து நவீன் வெளியிட்டதால் அது சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், நவீனும் சாணி பவுடர் அருந்தி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சையத் அலி உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில்  உதவி ஆய்வாளருக்கு எதிராக நவீன் வைத்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பொது இடத்தில் மது அருந்தி தகாத செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், செல்போன் பேச்சை வைத்து உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்துள்ளது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.