பணத்தை கையாடல் செய்து முதலாளிக்கு நாமம் போட்ட பல்கலைக்கழக ஊழியர்...

முதலாளியின் பணத்தை கையாடல் செய்த ஊழியர்...

பணத்தை கையாடல்  செய்து முதலாளிக்கு நாமம் போட்ட பல்கலைக்கழக ஊழியர்...

நம்பிக்கையோடு ஊழியரிடம் பணியை ஒப்படைத்த நிலையில் முதலாளியை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் அருகே முத்தையா நகரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவர் சொந்தமாக தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக சுரேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியரான இவர் சத்யமூர்த்தியிடம் கூடுதலாக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில், சுரேஷின் மீது நம்பிக்கை வைத்த சத்தியமூர்த்தி நாள்தோறும் வரும் பணத்தை வசூல் செய்யும் பணியை நம்பி கொடுத்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் இதுவரை சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கையாடல் செய்துள்ளார். மேலும், இதற்கு உடந்தையாக சுரேஷின் தாய் சுந்தரி செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி கையாடல் செய்த பணத்தை வைத்து பைனான்ஸ் நிறுவனம் ஒன்றை தொடங்கி சுரேஷும் அவரது தாயாரும் இணைந்து பணம் வட்டிக்கு கொடுக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளனர். இதனைதொடர்ந்து, சந்தேகமடைந்த சத்தியமூர்த்தி கையாடல் செய்த பணத்தை சுரேஷிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சத்தியமூர்த்தி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்திகணேஷிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் மற்றும் அவரது தாயார் சுந்தரியின் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பண மோசடி, நயவஞ்சகம் செய்து பணத்தை கையாடல் செய்தது, பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தது போன்ற வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள சுரேஷின் தாயார் சுந்தரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எனினும், நம்பிக்கையோடு ஊழியரிடம் பணியை ஒப்படைத்த முதலாளியை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.