சிறுமி வழக்கு: " உறவினர்கள் பிறழ்சாட்சியாக மாறியது துரதிருஷ்டவசமானது" நீதிபதி கருத்து!

சிறுமி வழக்கு: " உறவினர்கள் பிறழ்சாட்சியாக மாறியது துரதிருஷ்டவசமானது" நீதிபதி கருத்து!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அச்சிறுமியின் உறவினர்கள் பிறழ்சாட்சியாக மாறியது குறித்து கருத்தும் தெரிவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு  சிறுமி, உறவினரான பள்ளி தாளாளர் வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, வீட்டுக்கு வந்த சிறுமிக்கு குடிநீரில் மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தாளாளர், அதை வீடியோவாக பதிவு செய்து, சிறுமியை மிரட்டியும் வந்துள்ளார். 

தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தும், உறவினர் என்பதால், எந்த புகாரும்  கொடுக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய உறவினரும், அவரது மனைவியும், சிறுமியை மன ரீதியாக காயப்படுத்தி உள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி, செப் 29ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, உறவினர், அவரது மனைவியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழககை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி விசாரித்தார். அப்போது, சிறுமி மரணத்துக்கு காரணமான உறவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால்,  அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என  விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் அனைவரும் பிறழ்சாட்சியாக மாறியது துரதிருஷ்டவசமானது என தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய சிறுமியின் தந்தை, மகளை பாதுகாக்க தவறிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை தாக்கல்!