மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகையை அபேஸ் செய்த கும்பல்.!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் எதிரே மூதாட்டி ஒருவரின், கவனத்தை திசை திருப்பி 10 சவரன் நகையை வழிபறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகையை அபேஸ் செய்த கும்பல்.!

சென்னை வேப்பேரி அடுத்த ஈவிகேஎஸ் சம்பத் சாலையில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சசிகலா. இவர் இன்று மதியம் 12.30 மணியளவில் அருகில் இருந்த ஜெயின் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது குடியிருப்பு வாசல் அருகே வந்த டிப் டாப் ஆசாமிகளான 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் அனைவரும் ஜெயின் கோவிலின் பக்தர்கள் எனவும், கடவுளை வழிபட பழங்கள் வாங்கித் தருமாறும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மூதாட்டி அருகில் இருந்த பழக்கடையில் இருந்து அவர்களுக்கு பழங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவர்கள் உங்கள் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எங்களுக்கு தெரியும் எனவும் அவருக்கு விரைவில் குணமடையும் எனவும் கூறி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின், கையில் இருந்த வளையல் உள்ளிட்ட நகைகளைக் கழற்றி பர்சில் வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதை அப்படியே செய்த மூதாட்டி பின்னர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, பர்சில் வைத்த தனது 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தான் அவருக்கு தெரியவந்தது, தன்னை அந்த 4 பேரும் ஏமாற்றியது.

நகையை பறிகொடுத்த ஆதங்கத்தில் கண்கலங்கிய மூதாட்டி சசிகலா, இச்சம்பவம் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சி.சி.டி.வி காட்சிகளில் வந்தவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், அவர்கள் ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.