100 ரூபாய் கடன் தராததால் நண்பனை இரும்பு ராடால் அடித்து கொன்ற நபர்...

ஆவடியில் ரூ.100 கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில்  கட்டிட தொழிலாளியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தொழிலாளி கைது.

100 ரூபாய் கடன் தராததால் நண்பனை இரும்பு ராடால் அடித்து கொன்ற நபர்...

ஆவடி, ஆனந்தம் நகர், புலவர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இதே பகுதி, கண்ணகி தெருவை சேர்ந்தவர் பூபதி. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். மேலும், நண்பர்களான இவர்கள் இருவரும் தினமும் ஒன்றாக வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை சிவகுமார், பூபதி இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றனர். பின்னர், இவர்கள் இருவரும் ஆவடி, காமராஜர் நகர், முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கட்டட பணியில் ஈடுபட்டனர். பின்னர், மாலை வேலை முடிந்ததும் சிவகுமாருக்கு, பூபதி ரூ.1000  கூலி பணத்தை கொடுத்து உள்ளார்.

அப்போது, சிவக்குமார் வீட்டு உரிமையாளர் கொடுத்த சாப்பாடு பணம் ரூ.100 எனக்கு தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்டும் பூபதி பணம் கொடுக்கவில்லை. இதனை அடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் தகராறு செய்த படியே வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். பின்னர், வீட்டருகே சிவகுமார் வந்த பிறகு, பூபதியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து பூபதியின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதில், பூபதிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பூபதி இரும்பு ராடை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் சிவகுமார் தரையில் விழுந்தார். இதோடு ஆத்திரம் தீராத பூபதி அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மீண்டும் சிவகுமாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகுமார் உயிருக்கு போராடினார். இதனையடுத்து உறவினர்கள் விரைந்து வந்து சிவகுமாரை 108ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகுமார் இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு, போலீசார் தனிப்படை அமைத்து பூபதியை தேடினர். 

பின்னர், தனிப்படை போலீசார் இன்று காலை தலைமறைவாகி இருந்த பூபதி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், தீவிர விசாரணைக்கு பிறகு பூபதியை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.