வீடுகளை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் கைது...

சென்னையில்  பல்வேறு நபர்களுக்கு வீட்டை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை   மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வீடுகளை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் கைது...
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னை கீழ்க்கட்டளை, தாம்பரம், மேடவாக்கம் மற்றும் சேலையூர் போன்ற இடங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களை அணுகி வீட்டை அதிக வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பெற்று தருவதாக கூறியுள்ளார். மேலும், உரிமையாளர்களிடம் பெற்ற வீடுகளை பிரகாஷ் தனது பெயருக்கு அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு அந்த வீடுகளை அப்பாவி நபர்களுக்கு லீசுக்கு விட்டு அதன் மூலம் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பாக  சுமார் 40 க்கு மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருச்செங்கோட்டில் வைத்து கைது செய்தனர். பின் சென்னை அழைத்துவரப்பட்ட பிரகாஷை விசாரணைக்குப் பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.