ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் கிடந்த ஆணின் எலும்புக்கூடு- கொலையா ? தற்கொலையா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் கிடந்த ஆணின் எலும்புக்கூடு- கொலையா ? தற்கொலையா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாம்பன் விளை பகுதியல், தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாததால் அங்கு முள் செடிகள் அதிகம் வளர்ந்த காட்டுப்பகுதியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் இரண்டு நபர்க: ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சில ஆடுகள் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் போய் மேய்ந்துள்ளன. பின்னர் அவற்றை வெளியில் விரட்டுவதற்காக முட்புதர் இருந்த இடத்திற்குள் ஆடு மேய்ப்பவர் சென்றுள்ளார். அங்கு ஒரு மனிதனின் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசார் பத்துக்கும் மேற்ப்ட்டோர் பாம்பன்விளை காட்டுக்குள் கிடந்த எலும்புக்கூட்டை மீட்டனர். கண்டறியப்பட்ட எலும்புக்கூடு ஆணுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. உடலின் சதைகள் முழுவதும் அரித்து எலும்புக்கூடாக கிடந்ததால், நபர் இறந்து சுமார் பத்து மாதங்களுக்கு மேல் இருக்கும் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் எப்படி இறந்தார் ? ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எலும்புக்கூடு கிடந்ததால் இறந்து கிடந்த நபரை யாரேனும் கொன்று வீசி சென்றுள்ளனரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த கிடந்த அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.